tamilnadu

வேலை... ஒரு பெருங்கனவு

உலகின் இளமையான நாடு இந்தியா. நாட்டின் மக்கள் தொகையில் 15-24 வயதுடைய இளைஞர்கள் 19 கோடி பேர் (18 சதவீதம்) ஆவர். வேலை வாய்ப்பை உருவாக்கி அந்த இளம் சந்ததியினரின் ஆற்றலை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதே அரசின் மிக முக்கியமான கடமை.2020ல் இந்திய நாட்டின் சராசரி வயது என்பது 29 வயதாக இருக்கும். சீனாவிற்கு கூட இது 37 ஆக, ஜப்பானுக்கு 48 ஆக தான் இருக்கும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அப்படிப்பட்ட நமது நாட்டில் படித்து முடித்திருக்கும் இளைஞனுக்கும், படிக்கின்ற இளைஞனுக்கும் மிகப்பெரிய கனவே அவனுடைய வேலை பற்றியதுதான். ஒவ்வொரு ஆண்டும் ஒருகோடியே முப்பது லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு சந்தையில் இணைகின்றனர். மோடி அரசாங்கம் உருவாக்கிய புதிய திட்டங்கள் என்னென்ன? இத்திட்டங்களால் உருவான வேலைவாய்ப்புகள் எத்தனை? ஏற்கனவே நடைமுறையிலிருந்த திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளனவா? ஆம் எனில், வேலைவாய்ப்பு எவ்வளவு பேருக்கு கிடைத்துள்ளது? இவையெல்லாம் நாம் எழுப்ப வேண்டிய கேள்விகள்.சமீபத்திய அறிக்கையின்படி, அக்டோபர் 2018ல் நாட்டின் வேலையின்மை என்பது 6.9 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.  ஜூலை 2017ல் 140 லட்சமாக இருந்த வேலை தேடிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அக்டோபர் 2018ல் 295 லட்சமாக உயர்ந்துள்ளது.  


2006ம் ஆண்டில் 18 முதல் 23 வயது வரை உள்ளவர் களிடையே வேலையின்மை என்பது 11 சதவீதமாக இருந்தது. 2016ல் 26 சதவீதமாகஉயர்ந்துள்ளது. 8ம் வகுப்பு வரை படித்தவர் களிடையே வேலையின்மை என்பது 2.4 சதவீதம், 10ம் வகுப்பு வரை படித்தவர்களிடையே 3.2 சதவீதம், 12ம் வகுப்பு வரை படித்தவர்களிடையே வேலையின்மை 4.4 சதவீதம், பட்டதாரிகளிடையே 8.4 சதவீதம், முதுநிலை பட்டதாரிகளிடையே 8.5 சதவீதம், தொழிற்கல்வி படித்தவர்களிடையே 11 சதவீதம் என்ற நிலை உள்ளது. 2030 வரை இப்படி படித்து முடித்து வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே தான் போகும் என்றும், நமது நாடு தொழில் கொள்கையிலும், வேலைவாய்ப்பு திட்டமிடலிலும் தோற்றுப் போயுள்ளது என்று தேசிய மாதிரி ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மேலும் அந்த அறிக்கை இளைஞர்கள் சோர்வடைந்து, வேலை தேடும் பட்டியலில் இருந்து விலகி நிற்பதாகக் கூறுகிறது. இதனாலும் தொழிலாளர்களின் வேலை பங்கேற்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது என்கிறது. (2004-2005ல் 43 சதவீதம், 2011-2012ல் 39.5 சதவீதம் 2017-2018ல் 36.9 சதவீதம்) இது ஒரு நாட்டிற்கு அபாயகரமான அறிகுறியாகும். - இந்தக் கேள்விகளுக்கு மோடி, எந்தக் கூட்டத்திலும் பதில் சொல்வது இல்லை.


எஸ்.பாலா

;